//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஜெனிவால் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்



சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த, இரண்டு நாள் சிறப்பு விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. 

இந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சிறிலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினர்.
அதேவேளை, எதிர்க்கட்சியினர், சிறிலங்கா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் – நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக எச்சரித்தனர்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்துகள்-
சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும-
“மனிதஉரிமைகள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, அபிவிருத்தி அடைந்த நாடுகளை சக்திவாய்ந்த நாடுகள் மிரட்டுவதை ஐ.நா அனுமதிக்கக் கூடாது.
ஜெனிவா தீர்மானம் நாட்டில் மீண்டும் சிங்கள- தமிழ் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கே கொண்டு செல்லும்.
சிறிலங்கா மீதான இந்தத் தீர்மானம் மனிதஉரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இராஜதந்திர ரீதியாக நாம் உண்மையை உலகிற்கு சொல்வோம்.
சிங்கள மக்கள் அனுபவிக்கும் எல்லா சுதந்திரத்தையும் உரிமைகளையும் தமிழ்மக்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.“
சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச-
“ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், ஏற்பட்ட சவால்களை முறியடிப்பதில் சிறிலங்கா அதிபர் மிகவும் தைரியத்துடன் செயற்பட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இரகசியச் சதி செய்கின்றன.
வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து அவர்களால் செய்ய முடியாது போனதை, பராக் ஒபாமாவை வைத்து செய்ய முனைகிறார்கள்.
வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுடன் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு காண்கிறார்கள்.“
ஐதேக. நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன்-
“ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்கா அமைச்சர்கள் கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையிலன்றி கண்டபடி கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
எந்தவொரு நாடும் சிறிலங்கா விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறது சிறிலங்கா அரசின் கொள்கை அறிக்கை.
இதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு என்றால், ஐ.நாவின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.“
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க–
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கக் கூடாது- அது முழுமையற்றது.
அதில், இந்தியாவும் அமெரிக்காகவும், விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் கொடுத்த – போரின் முன்னைய காலகட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.“
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல-
“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் வேறு விதமாகச் சொல்கிறார்.
ஜெனிவா தீர்மானம் சட்டரீதியாக சிறிலங்காவைக் கட்டுப்படுத்தாது என்றும், அது நாட்டின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தத் தீர்மானத்தை வைத்து சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்குநாடுகள் கொண்டு வரக் கூடும்.
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐ.நா ஊடாக விதிக்கத் தேவையில்லை. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அதனைச் சுயமாகவே செய்யலாம்.
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்த தவறிவிட்டது. அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு 13வது திருத்தம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியையும் இல்லை என்று கூறியது.
இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் சரிவரக் கையாளாது போனால், சூடானில் ஏற்பட்டது போன்று நாட்டை பிளவுபடுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும்.“

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக