//]]>3

வெள்ளி, 25 மே, 2012

ஐந்து ஆயர்களுக்கு நீதிமன்ற உத்தரவு


மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 27ம் திகதி மன்னாரில் மக்கள் ஒன்று கூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ள ஐந்து ஆயர்களுக்கு மன்னார் நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது.
மன்னார் பொலிஸார் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமன்னார்முருங்கன்வன்கலாய் மற்றும் மடு ஆகிய கிறிஸ்தவ ஆலய ஆயர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடலின்போது ஏற்படலாம் என கருதப்படும் போக்குவரத்து நெரிசல்அமைதிக்கு பங்கம்தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன முறுகல்,மற்றும் அமைச்சர் ஒருவரின் உருவ பொம்மை எரிப்பு போன்ற விடயங்களை முன்வைத்து பொலிஸார் இந்த முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் தெய்வ பிரார்த்தனையின் நிமித்தம் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ சமுகம் தெரிவித்துள்ளது.இவர்கள் எந்தவொரு பேரணியையோ ஆர்பாட்டத்தையோ நடத்த ஏற்பாடு செய்யவில்லை.இந்த ஒன்று கூடலுக்கு அரச ஊடகத்தின் பரிவு உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைச் சிறுமிகள் சிங்கப்பூரில் விபசாரத்தில்....



சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சிங்கப்பூருக்கு இரு சிறுமிகளையும் அனுப்பி அவர்களை விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர் என இவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
களனியைச் சேர்ந்த சரத் எக்க நாயக்க மற்றும் சுகந்தி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.குறித்த சிறுமிகளுக்கு முதற் கொடுப்பனவாக தலா 25,000 ரூபாவை வழங்கியதுடன் நாளாந்தம் 5000 ரூபாவை வழங்குவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டே இவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்இதேவேளை, இவ்வாறான விபசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோரின் பின்னணியில் ஆளுந்தரப்பு அரசியல் பலம் உள்ளதாகத் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கை பெண் ஒருவரை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்கு அனுப்புவதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது

தமிழரசு மாநாடு நடைபெறவிருந்த மண்டபம் எரிப்பு!



மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்டபத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்துவந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்ததாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் மண்டபத்தினக் திரைச்சீலை உட்பட பல பொருட்கள் தீயினால் எரிந்துள்ளன. சம்பவத்தையடுத்து மண்டபத்துக்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு இங்கு நடைபெறவிருப்பதை முன்னிட்டு தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு மண்டபத்தைக் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி மாநாட்டை குழப்பும் நோக்கத்துடனேயே விஷமிகள் சிலர் இந்த நாசகார வேலையைச் செய்திருக்கலாம் எனவும் தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.