மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்டபத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்துவந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்ததாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் மண்டபத்தினக் திரைச்சீலை உட்பட பல பொருட்கள் தீயினால் எரிந்துள்ளன. சம்பவத்தையடுத்து மண்டபத்துக்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு இங்கு நடைபெறவிருப்பதை முன்னிட்டு தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு மண்டபத்தைக் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி மாநாட்டை குழப்பும் நோக்கத்துடனேயே விஷமிகள் சிலர் இந்த நாசகார வேலையைச் செய்திருக்கலாம் எனவும் தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக