பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் தீவிரவாதிகள் உட்பட 384 கைதிகள் தப்பிச் சென்றனர். இதற்கு பேஸ்புக் தான் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பஸ்தூன் மலைப்பகுதியிலுள்ள பான்னூ என்ற இடத்தில் சிறைச்சாலையில் தீவிரவாதிகள் உட்பட பல்வேறு கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தலிபான் தீவிரவாதிகள் அங்கு திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராக்கெட் குண்டுகளும், கையெறி குண்டுகளும் வீசப்பட்டதால் சிறைச்சாலை தகர்ந்தது.
பின்னர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தங்கள் கூட்டாளிகளை தலிபான்கள் விடுவித்தனர். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் 384 கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.
கடந்த 2003ம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ தளபதி முஷாரப்பை கொல்ல முயன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அட்னன் ரஷித் என்ற கைதியும் நேற்று தப்பிச் சென்றுள்ளான்.
ரஷித்தை விடுவிப்பதற்காக பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனைக் கைதிகள் 21 பேர் உட்பட மொத்தம் 384 கைதிகள் தப்ப வைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் இருந்தாலும் ரஷித் கைபேசி உபயோகித்து வந்ததாகவும், பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் ரஷித்தின் பங்களிப்பு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவற்றின் உதவியால் தான் ரஷித் சிறையிலிருந்து தப்பியுள்ளான். மேலும் பத்திரிகையாளர்கள் உட்பட பலருடன் சிறையிலிருந்தபடியே ரஷித் தொடர்பு வைத்துள்ளான். அவர்களுடன் கைபேசியில் பேசியது மட்டுமின்றி அடிக்கடி குறுந்தகவல்களும் அனுப்பி வந்துள்ளான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.