சிறிகொத்தா தாக்குதல் தொடர்பாக ஸ்ரீநாத் பெரேரா குழு வெளியிட்டுள்ள அறிக்கை நடுநிலையற்ற பக்கசார்பான செயற்பாடொன்றின் எழுத்து மூல ஆவணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட மற்றும் முன்கூட்டியே தயார்படுத்தி வைக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிப்பதற்கான முயற்சியை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிக்கொத்தா தேர்தலின் போது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்களை தவிர வெளிநபர்கள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததை குறித்த குழு திட்டமிட்ட வகையில் கவனத்திற்கொள்ளவில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் சந்தர்ப்பத்தில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக சிறிக்கொத்தவிற்குள் தங்கியிருந்ததை ஸ்ரீநாத் பெரேரா குழு இறுவெட்டுக்கள் ஊடாகவோ, புகைப்படங்கள் மூலமாகவோ காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே அவர்கள் உட்பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்கியது யார்? ஆயுதங்களுடன் இருந்த அவர்களை வெளியேற்றுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவில்லை எனவும் கரு ஜயசூரியவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் நிராயுதபாணிகளான நபர்களையும், பெண்களையும் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய விதத்தை தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவாக ஒளிபரப்பிய போதிலும், அந்தக் குழு அது தொடர்பில் மௌனம் சாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேர்தலின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பான தரப்பினரைப் போன்றே எதிர்த்தரப்பினரும் அங்கு இருந்தமை வெளிப்படையான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தா மீதான தாக்குதலை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குழுவினரை அரசியல் தூக்குமேடையை நோக்கி இட்டுச் செல்வதற்கு குறித்த குழு முயற்சித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிக்கொத்தாவுக்கு வெளியே இருந்தவர்கள் தூண்டுதல் காரணமாக அங்கு வரவில்லை எனவும், ஒருவரை சுட்டிக்காட்டும் போது தம்மை நோக்கி நான்கு விரல்கள் திரும்பும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
குழுவினருக்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் அமைதியற்ற முறையில் செயற்படுவார்கள் என சஜித் பிரேமதாஸ மற்றும் தாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கட்சியின் சிரேஷ்ட பதவிகளை வகிக்கும் நபர்கள் குறித்த குழுவினரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிகொத்தா மீது கற்கள் எறியப்பட்ட சந்தர்ப்பத்தில் வெளியில் இடம்பெறும் விடயங்கள் குறித்து வினவுவதற்கு தாம் முயற்சித்தபோது பாதுகாப்பு தரப்பினர் போன்றே செயற்குழுவின் அநேகமானவர்கள் அதனை தடுக்கும் வகையில் செயற்பட்டமை இரகசியமல்ல எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தாக்குதலை எவர் நடத்தியிருந்தாலும் அந்த சந்தர்ப்பத்திலேயே தாம் உள்ளி்ட்ட குழுவினர் அதனை கண்டித்ததை குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையும் கட்சியாக மாற்றுவதற்கான மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தாமாகவே முன்வந்த குழுவினருக்கே, அன்றைய தினம் நன்றி தெரிவித்ததாகவும், அது கற்களை எறிந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிகொத்தவிற்குள் இனந்தெரியாத குழுவினர் தங்கியிருந்ததை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீநாத் பெரேரா குழு, அந்த நபர்களை முயல்குட்டிகளாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சி அருவெருக்கத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தலையீடு செய்தவர்கள் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றமை, வெற்றியீட்டும் கட்சிக்காக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள குழுவினரை விரட்டியடித்து, கட்சியை பழைய நிலையிலேயே தக்கவைப்பதற்கு வழி வகுக்கும் என கரு ஜயசூரியவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நபர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு எதிராக செயற்படும் நடைமுறையில் இருந்து தற்போதாவது ஐக்கிய தேசியக் கட்சியை விடுவித்து, ஒரே கருத்தின் கீழ் ஒன்றுதிரட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதித் தருணம் வரை பெரும்பாலான மக்களினதும், ஆதரவாளர்களினதும் நோக்கங்களை நிறைவேற்றுவற்காக முன்னின்று கட்சியின் ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.