புனித வெள்ளியான நேற்றைய தினம், தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கேரளா பெண் ஒருவருக்கு உடலில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு எற்பட்டு உள்ளது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது எப்படி அவரது கை,கால்களில் ரத்தம் வந்ததோ அதுபோல் இந்த பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்தது.
அவர் கேரளா மாநிலம் பாலகாடு தொட்டிபாறையை சேர்ந்த ஜோஸ்பின் விமலா(வயது 30). இவர் வருடம் தோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார்.
ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆஸ்ரமத்தில் தங்கி இருப்பார். இந்த ஆஸ்ரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு நடத்துவார்கள்.
அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொண்டு, தவக்காலமான 40 நாட்களும் இங்கேயே தான் இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும் தவக்காலத்தில் பங்கு கொண்டு ஜோஸ்பின் விமலா இன்று புனித வெள்ளி என்பதால் ஆஸ்ரமத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அப்போது பிரார்த்தனையில் ஆழந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் உடலில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதாவது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவரது 2 கை, 2 கால்கள், முகத்தில் ரத்தம் வழியும். அதுபோன்று ஜோஸ்பின் விமலாவிற்கும் ரத்தம் வழிந்தது. இதனை அருகே இருந்தவர்கள் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மெல்ல மெல்ல அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கார்மல் ஆஸ்ரமத்திற்கு படையெடுத்தனர். அவர்கள் ஜோஸ்பின் விமலா உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தம் இது ஆண்டவரின் சித்தம். அதனால் தான் இந்த புனித வெள்ளி தினமான இன்று ஜோஸ்பின் விமலா மூலம் காட்சி தருகிறார் என்று வணங்கினர்.
இந்த தகவல் சேலம் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் பரவியது. இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த காட்சியை பார்ப்பதற்காக ஏற்காட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ஜோஸ்பின் விமலாவிற்கு உடலில் ரத்தம் வழிவது இது முதல் முறை அல்ல. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அதுவும் புனித வெள்ளி அன்று தான் ரத்தம் கொட்டி வருகிறது.
கேரளாவில் இதுபோன்ற தகவல் பரவியதால் ஜோஸ்பின் விமலா பிரார்த்தனை செய்ய முடியாத அளவிற்கு கூட்டம் மொய்த்து விடும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏற்காட்டிற்கு வந்து செல்கிறார்.
இதுவரை ஜோஸ்பின் விமலா உடலில் ரத்தம் வழிவது பற்றி தமிழகத்தில் தெரியாத நிலையில் இந்த ஆண்டு புனித வெள்ளியையொட்டி தெரிய வந்தது. இதனால் ஜோஸ்பின் விமலாவை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவால் ரட்சிக்கப்பட்ட பெண் என்றே கூறுகின்றனர்.