விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், “உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்” என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது.
நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் காரணம், செல்போன் சிக்னல்கள், விமான காக்பிட்டின் தொடர்பு அலைகளை வெட்டும் என்பதால்தான். விமானம் பறக்கும்போது பயணிகள் செல்போன் உபயோகித்தால், விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் வைத்துள்ள கம்யூனிகேஷன் தொடர்புகள் பஃப் பண்ணும் என்பதால், செல்போன்களுக்கு தடை உள்ளது.
அதனால், விமானத்துக்குள் அவர்களால் பொருத்தப்பட்ட போன்கள் மூலம் பேச அனுமதி வழங்கியுள்ளன விமான நிறுவனங்கள். ஏர்லைன் போனில் கையை வைத்தால், உங்கள் கிரெடிட் கார்ட்டும் ஜெட் வேகத்தில் ஓடத் துவங்கும்!
வர்ஜின் அட்லான்டிக் தமது புதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்த போது, அதன் கம்யூனிகேஷன் சிஸ்டம் செல்போன் சிக்னல்களால் பாதிக்கப்படாத வகையில் அப்கிரேட் செய்திருந்தது. அந்த விமானங்களில் தற்போது பலவித டெஸ்ட்டுகள் செய்யப்பட்டபின், செல்போன் உபயோகிக்கலாம் என சிவில் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் வர்ஜின் அட்லான்டிக்கின் பதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களில் 35,000 அடி உயரம்வரை செல்போன்கள் பயன்படுத்தப்படலாம், டெக்ஸ் மெசேஸ் அனுப்பலாம், வெப் அக்சஸ் மூலம் இ-மெயில்களை அனுப்பலாம், ரிசீவ் பண்ணலாம். GPRS முலம் இவை சாத்தியமாகின்றன.
அட்லான்டிக் கடலைக் கடக்கும் விமானங்கள் அதிகபட்சம் 35,000 அடிகள் உயரம் வரையே பறப்பது வழக்கம். (பசிபிக் கடலைக் கடக்கையில் மட்டும் சில விமானங்கள், 38,000 அடி உயரம்வரை சிறிது நேரத்துக்கு பறக்க வேண்டியிருக்கும்) லண்டன் – நியூயார்க் ரூட், அல்லான்டிக் கடலின் மேல் பறக்கும் ரூட் என்பதால், வர்ஜினின் விமானத்தின் முழு நேரமும் செல்போன்கள் இயக்கப்படலாம்.
தற்போது வர்ஜின் விமானங்களில் உள்ள GPRS மட்டுப்படுத்தப்பட்ட பேன்ட்-வித்துடன் இயங்குவதால், ஒரே நேரத்தில் 10 பயணிகள் மட்டுமே செல் போனை பயன்படுத்த முடியும். ஆனால், அடுத்த வாரத்தில் இருந்து பேன்ட்-வித் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமானங்களிலும் டேக்-ஆஃப், மற்றும் லேன்டிங் நேரங்களில் செல்போன் உபயோகிக்க முடியாது. அத்துடன், அமெரிக்கா தமது வான்பகுதியில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், லண்டன்-நியூயார்க் விமானம் மேற்கே பறக்கும்போது, அமெரிக்காவில் இருந்து 250 மைல் வான் எல்லையை அடைந்துவிட்டால், அதன்பின் செல்போன் பயன்படுத்த முடியாது. அதேபோல, விமானம் கிழக்கே லண்டனை நோக்கிச் செல்லும்போது, அமெரிக்காவை விட்டு வெளியேறி முதல் 250 மைல்களுக்கு, செல்போன் பயன்படுத்த முடியாது.