வடக்கு மாகாணத்தின் தனியார் பேரூந்து சங்கங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்றையதினம் (16) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களது சமாசப் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளைத் தனித்தனியாக முன்வைத்தனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் கடுகதி பேரூந்துகள் வவுனியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரயாணிகளை ஏற்றி இறக்குவது நிறுத்தப்படல் வேண்டுமென்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
அத்துடன் கொழும்பு தவிர்ந்த ஏனைய தென்பதி நகரங்களுக்கான வீதி அனுமதிப்பத்திரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டது.
முல்லைத்தீவிற்கான வவுனியா பேரூந்துகளின் வருகை தவிர்க்கப்படல் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நன்மைபயக்குமென்ற விடயமும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட தனியார் பேரூந்து சங்கங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இங்கு பொதுவாக வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குரிய தனியார் பேரூந்து சங்கங்களுடன் கலந்துரையாடி இணக்கம் கண்டு. சமாசத்தை ஒழுங்குபடுத்திய பின்னர் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்;த்திரி அலன்ரின் (உதயன்) யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக