//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் ஆர்ப்பாட்டம்


வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது இல்லத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியை மாற்றவேண்டும், விடுதியின் இரவு மேற்பார்வையாளரை மாற்றவேண்டும், தமக்கான உணவுகள் சிறந்த வகையில் வழங்கப்படுவதில்லை, தமக்கு விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவதில்லை என தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் சில சிறுமியர் வீதியில் இறங்கி வைரவபுளியங்குளம் சந்திவரை சென்றனர். அங்கு வருகை தந்த காவல்துறையினர் அவர்களை மீண்டும் சிறுவர் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தனர். இதனை அடுத்து ஏராளமான பொது மக்கள், மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.

2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிய நிலப்பரப்பில் 3 மாடிகளை கொண்ட கட்டடிடமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கட்டியிருந்த கட்டிடத்திலேயே இச்சிறுவர் இல்லம் இயங்கி வருவதுடன் சிறுவர்களுக்கான புறச் சூழல் வசதிகள் பொதுமானதாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டநாளாக இருந்து வந்தது.

இங்குள்ள சிறுவர்கள் 2009 ஆம் ஆண்டு இறுதி யத்தத்தில் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகை தந்த தாய் தந்தையரை இழந்தவர்கள் மற்றும் தாய் தந்தையாரின் பராமரிப்புக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.

சிறுமிகளின் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்களை சந்தித்த வன்னிப்பராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கத்திடம் இது பற்றி கேட்டபொது, சிறுமிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை காண்பித்து இது உண்ண முடியாததாகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் வெளியில் சென்றுவரவும் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடவும் விரும்புகின்றனர். எனினும் அதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலை அவர்களுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதன் காரணமாக வேறு வழியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவத்ததுடன் 6 சிறுமிகளை காவல்துறையினர் வேறு சிறுவர் இல்லத்திற்கு உடனடியாக மாற்றியுள்ளதாகவும் அவர்களை மீண்டும் அதே சிறுவர் இல்லத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் அல்லது தம்மையும் அவர்களுடன் கூட்டிச்செல்ல வேண்டும் என ஏனைய சிறுமிகள் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக