//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு


நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்படி நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக எம்மால் கடந்த 18-06-2012 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஐனநாயக ரீதியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று விரிவடைந்து முறிகண்டி வரை விரிவடைந்து செல்கின்றது.
இது ஓர் முன்னேற்றகரமான விடயமாகும்.யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலப்பறிப்பு உட்பட பெருமளவு அநீதிகள் தொடர்பாக தமது உணர்வுகளை வெளிப்படுத்த வழியின்றி தமது மனங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த எமது மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தமது உரிமைக்குரலையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான போராட்டங்கள் தமிழர் தாயகத்தின் சலக பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களின் நீடித்த வெற்றியென்பது தமிழ்த் தேசத்தின் இறைமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதிலேயே தங்கியுள்ளது.அந்த வகையில் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சகல அநீதிகளுக்கும் எதிராக ஐனநாயகப் போராட்டங்களை தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஏனைய தரப்புக்களையும் இணைத்தவாறு எமது கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும். அத்துடன் ஏனைய தரப்புக்களும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தமிழ்த் தேசத்தின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவாறு முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
அடக்குமுறைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இத்தகைய போராட்டங்கள் எமது மக்களின் அவல நிலையையும் ஆழ்மன உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களின் அவல நிலையைப் போக்குவதற்காக நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும், தமிழ் மக்களது மீள் குடியேற்றத்தினை துரிதப்படுத்தவும், சிறீலங்கா அரசு மீது கடுமையான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்க வேண்டும்.
இப்போராட்டத்திற்கு சகல தமிழ் மக்களையும், சகல பொது அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள், அரசியல் கட்சிகளது பிரதிநிதிகளையும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுக்கின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
செயலாளர்
தமிழ்தேசிய மக்கள் முன்னணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக