//]]>3

புதன், 16 மே, 2012

நந்திக்கடல் நிலம் ஆக்கிரமிப்பால் பதற்றம்


முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அண்மித்த பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் நாலு ஏக்கர் நிலத்தினை கரைதுறைபற்று பிரதேச செயலர் செ.தயானந்தாவின் துணையுடன் அபகரித்த அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேட்பாளர் சசிரேகன் என்பவர் மக்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றத்திற்கு உதவி புரிதல், சட்டவிரோத மணல்அகழ்வு, மரக்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற பிரதேச செயலர் செ.தயானந்தா பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நான்கு ஏக்கரை சசிரேகன் என்பவருக்கு வழங்கியிருக்கின்றார்.
ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற குறித்த பகுதியினை ஆக்கிரமித்த குறித்த நபர்கள் கனரக வாகனங்களின் துணையுடன் அந்தப்பகுதியியைச் சுற்றி அணைக்கட்டி அங்கு மீன்வளர்க்க றிசாட்டின் கையாட்கள் முற்பட்டிருக்கின்றனர்.
சம்பவத்தினை அடுத்து அங்கு திரண்ட இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் அந்த நடவடிக்கையினைக் கைவிடுமாறு வாதாடியிருக்கின்றனர்,
உடனடியாக மக்களை எதிர்த்த சசிரேகன், நாங்கள் யார் தெரியுமா? அமைச்சர் றிசாட் பதியுதீனின் கையாட்கள்? எங்களுக்கு இந்தக் காணியினை பிரதேச செயலர் தயானந்தாவின் அனுமதியுடன் தான் இந்த நிலத்தினைப் பெற்றிருக்கிறேன். நீங்கள் இதனுள் தலையிட முடியாது என்று மக்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் குறித்த நபரை கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். தாக்குதலில் காயமடைந்த அவர் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதியைச் சுற்றி அரண் அமைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளைஅந்தப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் மக்களில் ஒருவரை கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைத்திருக்கின்றனர். பொலிஸாரால் கைதானவரை விடுதலை செய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாகத் திரண்டிருப்பதாகவும் இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக