பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது.
2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக