கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் அரசின் நிலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பெரும்பான்மையினரை மீறி எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகச் செல்லும் இந்தக் குழுவில் அதிமுக இடம்பெறாதது தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக