//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள்


இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எட்டுப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகச்செயலாளர் ஹர்ச அபயகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய அணிகளுக்கு வீரர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட முகாம்களிலேயே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய குறிபார்த்துச் சுடும் அணிக்கு நான்கு முன்னாள் போராளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு முன்னாள் போராளிகள் தேசிய துடுப்பாட்ட அணியிலும், ஒருவர் கராத்தே அணியிலும் இடம்பெறுகின்றனர்.
இராணுவத்தினருக்கு எதிரான போரில் உடல்உறுப்பை இழந்த மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி ஒருவர், அடுத்த பராஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் சார்பில் குறிபார்த்துச் சுடும் அணியில் இடம்பெறவுள்ளார்.
பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று வரும் 131 முன்னாள் போராளிகளில் இருந்தே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தேசிய குறிபார்த்துச் சுடும் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலைப் புலிகளின் குறிபார்த்துச் சுடும் அணியில் இடம்பெற்றிருந்தவர்களாவர்.
அடுத்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தயார்படுத்தும் வகையில் இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக இவர்களை புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு புனர்வாழ்வு அமைச்சுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவர்களுக்கு கொழும்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக