//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

மீண்டும் வந்தார் கிட்லர்


சர்வாதிகாரி ஹிட்லருக்கு அடுத்து வந்த ஆபத்தான தலைவர் தற்போதைய ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தான் என்று பிரிட்டன் பத்திரிக்கை தாக்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இடது சாரிச் சிந்தனையுடைய பிரிட்டன் பத்திரிகையான The New Statesman ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெலை Terminator போலப் படம் பிடித்து அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையின் மூத்த ஆசிரியரான மேதி ஹசன் கூறுகையில், ஹிட்லருக்கு அடுத்து வந்த ஆபத்தான தலைவர் மார்க்கெல் தான்.

யூரோ நெருக்கடியைத் தீர்க்கும் இவருடைய அணுகுமுறையால் இன்று இந்த உலகம் இரண்டாவது பேரழுத்தத்தை சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்க்கெல் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்தை விட, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமீன் நெதான்யாஹுவை விட, வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் – உன்னை விட ஆபத்தானவர் என்றும் இவரால் உலக ஒழுங்குக்கும், வளமைக்கும் பேராபத்து ஏற்படும் என்றும் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு முன்பு பதவி வகித்தவர் அனைவரும் ஜேர்மனியின் நற்பெயருக்கு உலக அரங்கில் களங்கம் வராமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் இப்போது மார்க்கெலின் தலைமையில் இந்நாடு தனிமைப்பட்டு கிடக்கின்றது என்று ஹசன் குற்றம் சாட்டுகிறார்.

மார்க்கெல்லால் இந்த நிதி நெருக்கடி ஏற்படவில்லை. ஆனால் ஏற்பட்டு விட்ட கடன் தொல்லையையும், பொருளாதார சிக்கலையும் தீர்க்க அவர் கூறும் ஆலோசனைகளும், செலவுக் கட்டுப்பாடுகளும், ஐரோப்பிய மக்களுக்கு எரிச்சலை ஊட்டுகின்றன.

மார்க்கெல் ஜேர்மானியரின் கடின உழைப்பைப் பாராட்டுகிறார். ஆனால் OECD கணிப்புப்படி கிரேக்கர் ஜேர்மானியரை விடக் கூடுதல் நேரம் உழைக்கின்றனர்.

அவர்கள் சராசரி ஜேர்மானிய நபரை விட 40 சதவீத நேரம் அதிகமாக உழைக்கின்றனர். இந்நிலையில் கிரேக்கர் கடன் தொல்லையிலிருந்து மீள பல செலவுக் கட்டுப்பாடுகளை சந்திக்கின்றனர்.

இதனை கிரேக்கர் மட்டுமல்ல ஜேர்மானியர் கூட விரும்பவில்லை. இந்த வெறுப்பின் விளைவாகத்தான் ஜேர்மனியின் மாநிலத் தேர்தல்களில் மார்க்கெலின் கட்சி தோல்வியைச் சந்தித்தது. ஆனால் மக்களின் இந்த வெறுப்பும் அது தந்த தோல்வியும் மார்க்கெலை அசைத்துக்கூடப் பார்க்கவில்லை.

மார்க்கெல் நாட்டின் பொருளாதாரத்தை வீட்டின் கணக்கு வழக்கு போலக் கருதுகிறார். வருமானத்துக்கு அதிகமாக செலவழிக்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது என்று நினைக்கிறார்.

ஆனால் 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 15 வளர்ந்த நாடுகளிலிருந்து 170 சான்றுகளை எடுத்து ஆராய்ந்ததில் இரண்டில் மட்டுமே செலவுகளைக் குறைத்து பொருளாதாரத்தை விரிவு படுத்தியுள்ளனர். மற்றபடி பொதுத்துறை செலவுகளைக் குறைப்பதால் ஒரு நாட்டின் பொருளாதார நிலை உயரும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மார்க்கெல் அரசு தன் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்வதற்கு சமமாகும். பொதுநிதிச் சிக்கலை நேருக்குநேர் சந்திக்க தைரியம் இல்லாத மார்க்கெலின் ஆலோசனையால் நெருக்கடியில் சிக்கிய கிரீஸ் போன்ற நாடுகள் இன்னும் அதிகமாகவே சிக்கலில் மாட்டிக் கொண்டன என்று ஹசன் மெர்க்கெலின் பொருளாதார கொள்கைகளின் பயனற்ற நிலையைச் சாடியுள்ளார்.

முடிவாக மார்க்கெல், ஐரோப்பியத் திட்டங்களை அழித்து, தனது அண்டை நாடுகளை திவாலாக்கி உலகப் பொருளாதார நெருக்கடியை புதிதாக ஏற்படுத்தியிருக்கிறார். இவரை உடனே நிறுத்தியாக வேண்டும். இனியும் இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

இந்த கட்டுரை குறித்து ஜேர்மன் பிரமதர் அலுவலகம் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக