//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

வெற்றிவிழாவில் மக்களை கொண்றவர்களுக்கு உயர் விருதுகள்



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது.
போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை.
1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இழந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவர்களில் 8 பேருக்கு மட்டும் தான் இந்த விருது கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் வரை கிடைத்திருந்தது.
கடந்த 19ஆம் திகதி விருது பெற்றவர்களில் இருவர் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியில் இடம்பெற்று மரணத்தைத் தழுவியவர்களாவர்.
ஏனைய பெரும்பாலானோர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பணிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருது வழங்கலின் போது, அரசாங்கம் ஆழ ஊடுருவும் அணி குறித்து வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினால் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவும் அணிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலும், நான்காவது கட்ட ஈழப் போரை வெற்றி கொள்வதிலும் முக்கியமான பங்கு வகித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2002ல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 2001 செப்டம்பர் 26ம் திகதி புதுக்குடியிருப்புக்கு அருகே ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் கடல், வான், தரைப் படைப்பிரிவுகளின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இவர் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர் மீதான கிளைமோர் தாக்குதல் ஒட்டுசுட்டானில் இடம்பெற்றதாகவே புலிகளால் தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மையில் அந்த தாக்குதல் நடந்த இடம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில், புதுக்குடியிருப்பு நகருக்கு மிகவும் அருகில் தான்.
அப்போது விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கியது புதுக்குடியிருப்பு.
அதற்கருகே வரை ஆழ ஊடுருவும் அணிகள் நுழைந்தன என்றால், அது புலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடும் என்பதால் தான் ஒட்டுசுட்டான் என்று அவர்கள் அறிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னரே புதுக்குடியிருப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் புலிகள் உருவாக்கினர்.
அதைவிட, மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நெடுங்கேணியிலும், இன்னொரு மூத்த தளபதி கேணல் ஜெயம் மன்னாரிலும் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர்.
மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிய ஆழ ஊடுருவும் அணி, நான்காவது கட்ட ஈழப்போரின் அச்சாணியாகவே மாறியது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் அகன்ற போர் அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தரப்பை ஊடறுக்க விடாமல் புலிகள் முன்னரங்கை அமைத்துச் சண்டையிட்டனர்.
அப்போது புலிகளின் பின்கள விநியோகத்தையும், முக்கிய தளபதிகளையும் இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் நெருக்கடி கொடுத்தது.
இத்தகைய தாக்குதல்கள் நடந்த பின்னர், அந்த இடத்தைச் சுற்றிலும் காடுகளில் தேடுவதற்கும் புலிகள் தமது ஆளணி வளத்தைச் செலவிட வேண்டியிருந்தது.
இது முன்னரங்கில் இருந்த புலிகளின் கவனத்தை, அவ்வப்போது பின்களப் பகுதி நோக்கித் திரும்ப வைத்தது.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில், இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் செயற்பட்டன.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அணியினர் மக்களோடு மக்களாக கலந்து விட்டிருந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.
புலிகளால் எதுவும் செய்ய முடியாத கட்டம் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்ற கருத்து வலுவாக உள்ளது.
புலிகளின் மரபுவழிப் போர்ப் பலத்தை ஒன்று குவிய விடாமல் திசை திருப்பி, காடுகளில் அவர்களை அலைய விட்டு, போராற்றலை பலவீனப்படுத்த ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் இராணுவத்துக்குக் கைகொடுத்தன.
புலிகளின் பல தளபதிகள் இந்த அணியினரின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணமாகினர்.
வடபோர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேணல் மகேந்தி, இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.
ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் புலிகளின் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி முடக்கி வைக்கின்ற அளவுக்கு நெருக்கடியினைக் கொடுத்தது.
போர்நிறுத்த காலத்திலும் கூட இந்த அணியின் செயற்பாடுகள் வன்னிப் பகுதிக்குள் குறையவில்லை.
அப்போதும் சரி, போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி, இத்தகையதொரு அணி தம்மிடம் இல்லை என்றும் புலிகளின் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் படைத்தரப்பு கூறிவந்தது.
போர் வெற்றி விழாவில் அதிஉயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மேஜர் லலித் ஜெயசிங்கவும் ஒருவர்.
2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று அப்போது புலிகள் வசம் இருந்த ஒட்டுசுட்டான் பகுதியில் நடந்த மோதலில், 3வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த இவர் கொல்லப்பட்டார்.
ஆழ ஊடுருவும் அணிகளுக்குப் பொறுப்பாக இருந்த இவர், மாவீரர் நாளன்று புலிகளின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு வாரம் முன்னதாகவே வன்னிக்குள் ஊடுருவியவர்.
முன்னரங்கில் இருந்து 40 கி.மீ உள்ளே ஊடுருவிய இவரது அணி, தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் தேடுதல் நடத்திய புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்கியது.
இந்த மோதலின் போது லெப்.கேணல் லலித் ஜெயசிங்க மரணமானார்.
இவர் மரணமானபோது அவர் பற்றிய விரிவான தகவல்களை இராணுவத் தலைமையகம், இணையத்தளத்தில் வெளியிட்ட மறுநாளே அதை நீக்கியது.
ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை மறைப்பதற்கே அந்த விபரங்கள் நீக்கப்பட்டன.
விருதுபெற்ற இன்னொருவர் 3வது சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் சந்தன.
இவர் மாங்குளம் கிளிநொச்சி வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் போது, மாங்குளம் துணுக்காய் வீதியைக் கடக்க முயன்றபோது புலிகளிடம் மாட்டிக் கொண்டவர். அந்த மோதலில் அவர் மரணமானார்.
நான்காவது கட்ட ஈழப்போர் காலத்திலும், போர் நிறுத்த காலத்திலும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்கள் தனியே விடுதலைப் புலிகளுக்கு மட்டும் இழப்புகளை ஏற்படுத்தவில்லை.
மாங்குளம் அருகே நடந்த ஒரு கிளைமோர் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்லப்பட்டார்.
இன்னொரு தாக்குதலில் கிளி பாதர் என்று அழைக்கப்படும், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரான கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டிருந்தார்.
அதேபோல பொதுமக்கள் பயணம் செய்த வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
இதற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளே பொறுப்பு என்று விடுதலைப் புலிகள் கூறினர். அரசாங்கமோ அதை மறுத்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னரணில் இருந்து 30, 40 கி.மீ தொலைவுக்குப் படையினர் எவ்வாறு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.
விடுதலைப் புலிகளுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள்தான் அங்கு நடக்கும் கிளைமோர் தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் படைத்தரப்பு கூறியது.
இதனால் தான் மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்ட போது அவர் பற்றிய தகவல் குறிப்புகள் இராணுவ இணையத்தளத்தில் இருந்து அவசரமாக நீக்கப்பட்டன.
இப்போது போர் முடிந்து விட்டது. ஆழ ஊடுருவும் அணிகள் மறைந்து ஒளிந்து ஊடுருவ வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களின் முகத்தை மறைக்க வேண்டிய தேவையும் இல்லை.
அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் புலிகள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவ்வாறான சம்பவங்களுக்கு ஆழ ஊடுருவும் அணி பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
இப்போதைய சூழலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட விவகாரம் போர்க்குற்றமாகவே பார்க்கப்பட்டு விடும்.
ஆனாலும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படும் நிலையில், ஆழ ஊடுருவும் அணியை அரசாங்கம் பகிரங்கப்படுத்தியது துணிச்சலான விடயம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக