//]]>3

புதன், 30 மே, 2012

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழ ராணுவத்தினர்



யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது:
“பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துமாறு நாம் கோரவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதலை படைத்தரப்பே மேற்கொண்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த காலங்களிலும் இத்தகைய ராணுவப்பிரசன்னம் பல்கலைக்கழக சூழலில் நிலவியோது மாணவர்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டனர். மாணவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதுடன் அவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்திருந்தன.
தற்போது மீண்டும் ராணுவப் பிரசன்னம் யாழ். பல்கலைக்கழக சூழலில் ஏற்படுமானால் மீண்டும் மாணவர்கள் தற்போது உள்ளதைவிட அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக