//]]>3

வெள்ளி, 11 மே, 2012

ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவில் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு!



சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட் சின்னங்கள் காணப்படுவதாக சோலையம்மன் கோவில் பிரதமகுரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் புஷ்பரட்ணம், தொல்லியற்துறை ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் ஆகியோர் நீதிமன்றக் கட்டிடங்கள் இருந்த இடத்தில் மிகப்பழைய ஆலயம் ஒன்று இருந்து அழிந்ததற்கான சான்றுகளை அடையாளப்படுத்தி உள்ளனர்.

தற்போதைய நீதிமன்ற வளவில் இருந்த பிற்காலக் கட்டிடங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டிருந்தும் அந்த பிரதேசம் மட்டுமே சற்று மேடாகக் காணப்படுகிறது. இதற்கு போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர் ஆட்சியில் அழிக்கப்பட்ட அல்லது அழிவடைந்து போன ஆலயத்தின் அழிபாடுகள் அவ்விடத்தில் புதையுண்டிருப்பதே காரணமாக இருக்கவேண்டும் என பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார். தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டுவரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குள்ளும் செறிந்த அளவில் செங்கட்டிகளும், பொழிந்த முருகக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது.

அவை ஆலயம் ஒன்றின் கட்டிடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவமைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன என அவர் தெரிவித்தார்.1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும், அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலைப்பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும், அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது.

இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர். இச் சிலைகளைக் குழியில் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு உள்ளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு குறிப் பிடத்தக்கது.

இவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்தில் சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்துவரும் ஆலய அழிபாடுகள் உறுதிசெய்கின்றன. எதிர்காலத்தில் இங்கு கிடைக்கவுள்ள சான்றுகள் மேலும் பல உண்மைகளை வெளிக்கொணர உதவலாம் என பலர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக