டெல்லியில் நேற்று முன்தினம் போலீசார் அபார்ட்மென்ட் ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தி சோனு, தேவேந்திரா உள்பட 4 கிரிக்கெட் சூதாட்ட தரகர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக பிடிபட்ட சூதாட்ட தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நிழல்உலக தாதா சோட்டாசகீலின் பின்னணியில் இந்த கும்பல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட கும்பல் இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலககோப்பை 20-20 ஆட்டத்தில் தங்களது வேலையை காட்ட திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்காக அழகிகளை இவர்கள் ஏற்பாடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 8 அழகிகளுடன் இலங்கை செல்ல முயன்ற விபசார புரோக்கர் ஒருவர் போலீசில் சிக்கினார். இந்த கும்பலுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு அழகிகளை விருந்தாக்கி தங்கள் பக்கம் இழுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள இந்த கும்பல் திட்டம் தீட்டி வந்துள்ளது. இதற்காக சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் சமீப காலமாக அடிக்கடி இலங்கை சென்று வந்துள்ளனர். இதனை உறுதிபடுத்தும் விதமாக போலீசார் சமீபத்தில் இலங்கை சென்று வந்த பயணிகள் பட்டியலில் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் பெயர் உள்ளதா என விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சூதாட்ட கும்பல் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த 20-20 தொடரிலும் கைவரிசை காட்டியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சூதாட்ட தரகர்கள் குறித்த விவரங்களை டெல்லி போலீசார் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக