//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி ஆதி திராவிட காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் ராணிக்கும் காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை காளப்ப நாயக்கன்பட்டி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. மணமகள் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து அலங்காரம் செய்து தயாராக இருந்தார். தாலி கட்டும் நேரம் நெருங்கிய போது திடீர் என்று மணமகளை காணவில்லை. வீடு மற்றும் ஊர் முழுவதும் தேடினார்கள். எங்கும் காணாததால் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
என்றாலும் குறிப்பிட்டபடி திருமணத்தை முடிக்க இருவீட்டு பெற்றோரும் திட்டமிட்டனர். உடனே வீட்டில் இருந்த மணமகளின் தங்கையான 8-ம் வகுப்பு மாணவியை மண மகளாக அலங்காரம் செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மணமகன் மாரியப்பன் மாணவி கழுத்தில் தாலி கட்டினார். இந்த கட்டாய திருமணம் முத்துகாளிப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல் போலீசுக்கும், அதிகாரிகளுக்கும் பறந்தது. உடனே ராசிபுரம் தாசில்தார் செல்லகுமார், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள் ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் காதலில் உறுதியாக இருந்தார். இதனால் அவசர அவசரமாக மாப்பிள்ளை (மாரியப்பன்) பார்த்து ஊர்க்கோவிலில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். மாரியப்பனை மணக்க மணமகள் முதலில் மறுத்தார். ஆனால் பெற்றோர் காதலனை கைவிட்டு நாங்கள் பார்த்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும்.
இல்லையெனில் தற்கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். வேறு வழியின்றி திருமணத்துக்கு சம்மதித்தாள். கடைசி நேரத்தில் அவளாள் காதலனை மறக்க முடிய வில்லை. தாலி கட்டும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக காதலனுடன் ஓடிவிட்டாள். இதனால் பெற்றோர் மணமகளின் தங்ககைக்கு திட்டமிட்டபடி கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் மாணவியோ அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு 13 வயதுதான் ஆகிறது. இது மைனர் திருமணம் என்பதால் போலீசார் மணமகன் மாரியப்பன், மாணவியின் பெற்றோர் பொன்னுசாமி, செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி மாணவியை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தனர். அக்காள் திருமணத்துக்காக நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து இருந்தாள். கட்டாய திருமணத்துக்குப்பிறகு மாணவி நேற்று முதல் மீண்டும் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் சக மாணவிகளுடன் அமர்ந்து வழக்கம் போல் பாடம் படித்தாள்.
மாணவியிடம் திருமணம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியையோ மற்ற ஆசிரியைகளோ எதுவும் கேட்ககூடாது. மற்ற மாணவிகளும் அவளை ஒதுக்கி வைக்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அருண்மொழி தேவி அறிவுறுத்தியுள்ளார். மாணவி ஏற்கனவே 5-ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி இருந்தாள். ஆனால் ஆசிரியைகள் வற்புறுத்தலால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்தாள். தற்போது கட்டாய திருமணத்துக்குப்பின் அவளை படிப்பில் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியைகள் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த கட்டாய திருமண விவகாரத்தில் மணமகனின் பெற்றோர் செல்லமுத்து பச்சையம்மாள் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். கட்டாய திருமண குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக