அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது.
ரேஸ் கார்கள், சிறிய ரக விமானங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. தரையில் மட்டுமின்றி வானத்திலும் செல்லக்கூடிய காரை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் 2006ம் ஆண்டு ஈடுபட்டது.
கடந்த 2009ம் ஆண்டில் தயாரிப்பு பணிகள் முடிந்த பின், பல கட்டமாக இதன் சோதனை நடந்து வந்தது. டிரான்சிஷன் என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டது.
இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அமெரிக்க தேசிய ஹைவே பாதுகாப்பு அமைப்பு கடந்த ஜூலையில் அனுமதி அளித்தது. இதையடுத்த சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் கடந்த 23ம் திகதி நடத்தப்பட்டது.
டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை சோதனை பைலட் பில் மிட்டீர் ஓட்டிச் சென்றார். முதலில் தரையில் வழக்கமான கார் போல ஓடிச் சென்றது.
சிறிது நேரத்தில் கார் கதவுகள் போல இருந்த இறக்கைகள் இரு பக்கமும் விரிந்தன. மெல்ல உயரே எழும்பிய கார் 8 நிமிடத்துக்கு 1400 அடி உயரம் வரை பறந்து பத்திரமாக தரையிறங்கியது.
சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்னா டிட்ரிச் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
கார் விலை ரூ.1.42 கோடி. ஆர்டர் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 சீட்கள் உள்ளன. ஓட, பறக்க அன்லெடட் பெட்ரோல் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக