//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

நீதி கிடைக்காவிட்டால் போராடத்தயார் முல்லைத்தீவு மக்கள்


தமது அவலநிலை தொடருமேயானால் தாம் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபடப் போவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவுக் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழில் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சி.அருள்ஜெனிஸ் பேட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கீழ் 18 கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களின் கீழ் சுமார் 4 ஆயிரத்து, 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடற்றொழிலை வாழ்வாதார தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் பேய்ப்பாறைப் பிட்டி வரையான 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட கடற்கரையோரப் பகுதிகள் இங்கு உள்ளன. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதைவிடச் சிறுகடல்பகுதிகளாகச் சாலைக்கடல், சுண்டிக்குளம்கடல், நந்திக்கடல், நாயாறு, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்றன காணப்படுகின்றன.
இந்த நிலையில் சிறுகடற்பகுதிகளில் சட்டவிரோத இயந்திரப்பாவனை, கூட்டுவலைப் பயன்பாடு வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகளும் ஆழ்கடலில் அத்துமீறிய மீன்பிடிகளும் வேறுஇடங்களைச் சேர்ந்த மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
இந்த நிலை தொடர்பாக மாவட்ட அரச அதிபர் கடற்றொழில் நீரிய திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரி, பொலிஸார் எனப் பலருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலை நீடிக்குமானால் அனைத்து மக்களும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையும் தவிர்க்க முடியாதென முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக