//]]>3

புதன், 13 ஜூன், 2012

200 பெண்கள் நிலை என்ன


திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து வந்த சுகந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று அங்குள்ள 200 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமலை நகராட்சி மன்றத்துக்கு அழைத்து தொழில் வாய்ப்பு தருவதாகக் கூறி கூட்டம் வைத்துள்ளனர். இவர்கள் மிக விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் எங்கு அழைத்துச் செல்லப் போகின்றார்கள்? எதற்கு அழைத்துச் செல்லப்போகின்றார்கள்? என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார். “கொழும்பு வர்த்தக மையத்திலிருந்து வந்தவர்கள் ஆடைத்தொழிற்சாலை மற்றும் ஏனைய தொழில்களில் தங்களை ஈடுபடச் செய்யவுள்ளனர் எனப் பெண்கள் கூறுகின்றனர். தொழில் வாய்ப்பு இன்மையால் கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடு படுபவர்களிடம் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும்”
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போதைய காலகட்டத்தில் தொழில்வாய்ப்பென்பது கட்டாயமானதொன்றாகும். அதனைக் காரணம் காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வந்த சுதந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று திருகோணமலை நகராட்சி மண்டபத்துக்கு பெண்களை அழைத்து சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இவர்கள் மிகவிரைவில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கொழும்புக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக அறியமுடிந்தது. எங்கு அழைத்துச் செல்லப் போகின்றார்கள்? எதற்கு அழைத்துச்செல்லப் போகின்றார்கள்? என்பது கூட தெரியாத நிலையில் கொழும்பு வர்த்தக மையத்திலிருந்து வந்தவர்கள் ஆடைத்தொழிற்சாலை மற்றும் ஏனைய தொழில்களில் தங்களை ஈடுபடச் செய்யவுள்ளனர் எனப் பெண்கள் கூறுகின்றனர்.
கொழும்பிலிருந்து வந்தவர்கள் யார்? இவர்கள் எதற்காக வந்திருக்கின்றார்கள்? என்பது கூட இதுவரைக்கும் தெரியாத நிலையிலேயே பெண்கள் ஏமாறுவதற்கு இருக்கின்றார்கள். கிழக்கில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அவசியம் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியான நிலைப்பாடு இருக்கின்றது. அவ்வாறு வேலை கொடுப்பதாக இருந்தால் எந்த நிறுவனம்? அது எங்கிருந்து வருகின்றது? எவ்வாறு தொழில் கொடுப்பது? என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் பஸ்ஸில் பெண்களை ஏற்றி வேலைதருவதாகக் கூட்டிக்கொண்டு போவதென்பதை எந்தவகையில் ஏற்றுக் கொள்ளமுடியும்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக