//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

வெறுமனே தெரிவுக் குழுவுக்குள் செல்லாதீர்கள்! யாழ். பல்கலை.மாணவன் தர்சானந்



போர் முடிவடைந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. இனப்பிரச்சினை என தீர்க்கப்படுவதற்கு இனி எதுவும் கிடையாது என அரசாங்கம் கூறிவந்தது.

எனினும் பல்வேறு பட்டவகையில் வெளியுலகில் இருந்து அரசாங்கத்திற்குக் கிடைத்த அழுத்தங்களை சமாளிக்கும் நோக்குடன் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வளிப்பதாகக்கூறி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவென ஒரு குழுவை தற்போது முன்னிறுத்தியுள்ளார்கள்.

இதில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் உள்வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது வெற்றி பெற்றுள்ளது போலவே தோன்றுகின்றது.

கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவிற்குள் செல்வது சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாக நாம் சகல விட்டுக்கொடுப்புகளையும் செய்துவிட்டோம் எனக் காட்டுவதாகவும் அதன் மூலம் ஓர் தீர்வைப் பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களாகவும் அமையும் என எதிர்பார்த்தாலும் தெரிவுக் குழுவிற்குள் வெறுமனே பிரவேசிப்பது புத்திசாலித்தனமானதல்ல.

இத் தெரிவுக் குழுவுடன் எமக்கு என்று இறுதித் தீர்வு கிட்டவேண்டும் என்ற நிபந்தனையை கூட்டமைப்பு முன்வைப்பது அவசியமானது. உலகை ஏமாற்ற இக்குழு பயன்படக்கூடாது.

தெரிவுக் குழுவிற்குள் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உறுதியான தீர்வை அங்கு கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்ற முடியுமா என்ற உறுதிமொழியை அரசாங்கம் எதோ ஒருவகையில் வழங்க வேண்டும்.

தெரிவுக் குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இல்லையேல் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெறும் மூடுமந்திரமான பேச்சுகளாகவும் காலத்தினை வெறுமனே இழுத்தடிப்பதற்கும் அரசாங்கம் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களைத் தீர்ப்பதற்குமான உத்தியாகவே இப் பேச்சுகள் நோக்கப்படும்.

அரசாங்கத்தினால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் அங்கம் வகிக்கக் கூடிய உச்ச இனவாதத்தினைக் கொண்டுள்ள கட்சிகள் குழுவில் முடிவுகளுக்குத் தடையாக அமைகின்றன எனக்கூறி தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறந்தள்ளப்பட்டு ஏமாற்றவும் படலாம்.

அவ்வாறாக ஏமாற்றப்படும் சூழலில் அது கால ஓட்டத்தினைக் கொண்டதாகவும் இக்காலத்தில் சர்வதேச அளவில் புவி நலன்சார் அரசியலை மையப்படுத்திய எம் மீதான கரிசனைசார் கண்ணோட்டங்கள் அனுதாபங்கள் குறைவடைந்தும் விடத்தக்க ஆபத்துகள் உள்ளன.

இந்நிலையில் தெரிவுக்குழு தொடர்பான சரியாக சூழ்நிலைகள் கூட்டமைப்பினால் ஊகிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக இனப்பிரச்சினைத் தீர்வில் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் பலம்வாய்ந்த சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பதும் அவசியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக