//]]>3

செவ்வாய், 1 மே, 2012

இன்று மே தினம்


இன்று மே தினம் இதனையிட்டு நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்களும் ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பிரதான கட்சிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களில் தமது மே தின நிகழ்வுகளையும் பேரணிகளையும் நடத்தவுள்ளதுடன் இந்நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின வைபவம் இம்முறை 'நாடே முதன்மை' (ரட எகட) என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளதுடன் இன்று காலையிலும் பிற்பகலிலும் பல்வேறு கட்சிகளினதும் மே தின ஊர்வலங்களும், நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மே தினக் கொண்டாட்டங்கள் பேரணிகள் நடைபெறும் சகல பிரதேசங்களினதும் பாதுகாப்பைப் போன்றே வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து பொலிஸ் பிரிவு இதற்கான சகல ஒழுங்குகளையும் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

மே தின நிகழ்வுகளையொட்டி மேலதிகமாக பத்தாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதான கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகப் பகுதிகளுக்கு கூடுதல் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் பாதுகாப்புப் பணிகள் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருக்குமெனவும் மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் வீதிகள் மூடப்படவுள்ளதாவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் இணைந்து மே தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு நகர சபை முன்றலில் நடத்தவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு நன்மையளிக்கும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. அரசாங்கத்தின் மே தின ஊர்வலம் முற்பகல் 11 மணியளவில் கொழும்பு பொரளை கெம்பல் பூங்கா மைதானத்திலிருந்து ஆரம்பமாகும். ராஜகிரிய, நாரஹேன்பிட்டி பகுதிகளிலிருந்து தனித்தனி ஊர்வலமாக வரும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் பேரணிகள் கெம்பல் பூங்காவில் ஒன்றாக இணைந்து அங்கிருந்து பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபை முன்றலை சென்றடையும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் யாழ்ப்பாணம் குருநகரை அடைந்ததும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இம்முறை ஐ.தே.க. வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைவதுடன் நவசம சமாஜக் கட்சி, பூமிபுத்ர புதிய சிஹல உறுமய, ருஹுணு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் எதிர்க் கட்சியின் மே தினக் கொண்டாட்டங்களில் இணைகின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தமது மே தினக் நிகழ்வுகளை கினிகத்தேனையில் நடத்துகிறது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் இ.தொ.கா. வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வதுடன் வட்டவளை நகரிலிருந்து கினிகத்தேனை வரை ஊர்வலம் பேரணியாகச் செல்லும். மலையகப் பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது.

ஜே. வி. பி. யின் மே தின நிகழ்வுகள் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் கொழும்பு பி. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் இவர்களின் ஊர்வலம் களுபோவிலையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் மேதினக் கூட்டம் கொழும்பில் நடைபெறுவதுடன், சுகாதார சேவைகள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டமும் கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணி பூண்டு லோயாவில் தமது மேதினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் மாபெரும் இன்னிசைக் கச்சேரியொன்றும் இடம்பெறவுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வு நுவரெலியா நகரில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாவதுடன் தொழிலாளர் கெளரவிப்பு, இன்னிசைக் கச்சேரிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசிய தொழிலாளர் சங்கம் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் மே தின நிகழ்வுகள் பதுளையில் தனித்தனியே நடைபெறுவதுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் எதிர்க் கட்சியின் யாழ். மே தின நிகழ்வோடு இணைந்து கொள்ளவுள்ளது. அத்துடன் சப்ரகமுவ தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், அதன் தலைவர் ரூபன் பெருமாள் தலைமையில் இரத்தினபுரியில் கொண்டாடவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக