//]]>3

திங்கள், 2 ஏப்ரல், 2012

சூழல் மாசடையாத புதிய ஓட்டோ


சூழல் மாசடைதல் என்பது உலகம் எதிர்நோக்கியிருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை. அதிகரித்து வரும் சனத்தொகை, இதனால் அதிகரித்து செல்கின்ற வாகனங்கள் என பல பிரச்சினைகளுக்கு உலகம் முகம்கொடுத்து வருகிறது. எதிர்பார்க்காதளவு உற்பத்தியாகியிருக்கும் வாகனங்களினால் வெளியிடப்படுகின்ற புகை - சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனை எவ்வாறு தடுப்பதென்பது பற்றி விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தியாவில் புதுடெல்லியில் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஓட்டோ ரிக்ஷாவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இலங்கை, இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஓட்டோ வண்டிகளினால் வெளியிடப்படுகின்ற புகைகள் சூழலை அதிகளவாக மாசுபடுத்தி வருகின்றன. இப்படியான நிலையில் சூழலை மாசுபடுத்தாத ஓட்டோ வண்டியின் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவின் தொழிற்றுறை மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையத்துடன் இணைந்து மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த அரியவகை ஓட்டோவினை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வடிவத்திற்கு 'சொலெக்ஷோவ்ஸ்' என பெரிட்டிருக்கிறார்கள். முச்சக்கர வண்களை ஆங்கிலத்தில் 'றைஷோ' என அழைப்பார்கள். அதனைப்போலவே சூரிய சக்தியில் இயங்குகின்ற முச்சக்கர வண்டி என்பதால் 'சொலெக்ஷோவ்ஸ்' என பெயரிட்டுள்ளார்கள். 

இக்கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியின் குறிப்பிட்ட சில நகரங்களில் 1000 ஓட்டோக்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்திலிருக்கும் 'சொலெக்ஷோவ்ஸ்' எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து பாவனைக்கு வரவிருக்கிறது.

மணித்தியாலத்திற்கு 25 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லக்கூடிய இந்த முச்சக்கர வண்டிகள் மூன்று வடிவங்களில் வெளிவரவிருக்கின்றன. இந்திய ரூபாய்களில் 45 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் பெறுமதிகளில் இந்த ஓட்டோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 

ஆரம்ப கட்டமாக சூரிய சக்தியில் இயங்கும் இந்த அரியவகை முச்சக்கர வண்டிகள் 1000இனை டெல்லியின் முக்கிய நகரங்களில் பாவனைக்கு விடவுள்ளனர். குறிப்பாக கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் இதனை பாவனைக்கு விடவுள்ளனர். இந்த ஓட்டோக்களின் தேவை 10 ஆயிரத்தினை இலகுவில் தொடும் என கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக