//]]>3

புதன், 20 ஜூன், 2012

வன்னி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி


மூன்று தசாப்பத்துக்கு மேலாக நிலவிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தகவல் தொழில்நுட்பம் ஊடாக தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. 


தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு அதில் போட்டியிடக்கூடிய வகையில் எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்காகவே தாருன்யட்ட ஹெட்டக் அமைப்பும் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவும் இணைந்து பயிற்சி பட்டறைகளை நடத்தின. 



´தலைமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சியூடாக எமது சமூகத்தை கட்டியெழுப்புவோம்´ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தாராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதிபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்வி வலயங்களிலிருந்த 200 மாணவர்கள் கலந்துகொண்டனர். 



அவர்களுக்கு கணினி அறிவு தொடர்பில் விளக்கப்பட்டதுடன் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பாகவும் கணினிசார் புத்திஜீவிகள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் இன்றைய சமுதாயத்துக்கு எத்தகைய வகையில் உதவுகின்றது என்பதையும் இளைய சமுதாயத்தினர் தங்களை எவ்வாறு தலைமைத்துவத்துக்கு உரியவர்களாக மாற்றிக்கொள்ளலாம் என்பதையும் பயிற்சிபட்டறையின்போது விளங்கப்படுத்தப்பட்டது. 



மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் நண்பகல் வரை நடைபெற்ற இப்பயிற்சிகளின்போது ஊடகவியலாளர்கள், கணினித் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் மாணவர்களுக்கு தமது அனுபவங்களையும் தலைமைத்துவத்துக்கான பண்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினர். 



இதன்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிறியான் டி சில்வா பங்களாதேஷிலிருந்து மைக்ரோசொப்ட் லிங்க் மூலம் மாணவர்களுடன் உரையாடியது அவர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.



´இலங்கையில் தற்போது சமாதானம் நிலவுகின்றதால் புதிய நட்புகளை தகவல் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.கடந்த சில தசாப்தங்களாக எமது நாடு பல எதிர்கால தலைவர்களை இழந்துவிட்டது. தற்போது இளைஞர் சமுதாயம் மீள் எழ வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சிகளை வழங்கி அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதே எமது நோக்கம்´ என சிறியான் டி சில்வா தெரிவித்தார். 



இந்நிகழ்வில், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரத்ன செனரத் தமிழில் உரையாற்றுகையில்: யுத்தத்தால் உறவுகளை இழந்த உங்களுக்கு அந்த வலி நன்றாக தெரியும். ஒரு காலகட்டத்தில் புத்திஜீவிகளை உருவாக்கிய மண் யாழ் மண் என்பது பலருக்கு தெரியும். தற்போது அங்கிருந்து புத்திஜீவிகள் உருவாகின்றனரா? இத்தகைய நிலையில் கணணி அறிவு மிக முக்கியமானது. கணினி கல்வியை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். 



எதிர்காலத்தில் மடிக்கணினிகளுடன் மாணவர்கள் பாடசாலை செல்லும் யுகம் தோன்றும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும் தாருன்யட்ட ஹெட்டக் அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடமும் இனபேதம் கிடையாது. அதனால் தான் அவர்கள் உங்களை கொழும்புக்கு அழைத்து வந்து இத்தகைய பயிற்சிகளை வழங்குகின்றார்கள். துப்பாக்கி,சயனைட் போன்ற கடந்தகால கசப்பான உணர்வுகளை மறந்துவிட்டு கணினி அறிவு தொடர்பில் கவனம் செலுத்த மாணவர்கள் முன்வரவேண்டும். இது உங்கள் யுகம். இத்தகைய சேவையை வடக்கு மாணவர்களுக்கு வழங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு எமது நன்றிகள் அவர்களது சேவை தொடர வேண்டும் என்றார். 



இந்த பயிற்சிபட்டறை தொடர்பாக முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் கே.வரதராஜ மூர்த்தி கருத்து தெரிவித்தார். 



´மாணவர்களை ஊக்குவிக்கும் இச்செயற்றிட்டம் மிக அருமையாக இருந்தது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தினர் இதனை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்களின் சிந்தனையை உயர்த்தும் வகையில் இது இருந்தது. தோல்வியில் இருந்து விடுபட்டு வெற்றிகரமான வாழ்வை அடைவது எப்படி என அவர்களுக்கு போதிக்கப்பட்டது. கணினி இல்லாவிட்டால் உலகம் இல்லை. மைக்ரோசொப்ட் நிறுவனம் சிறந்த அடித்தளத்தையிட்டுள்ளதுடன் அவர்களது பாரிய சேவையாக நாம் இதனை காண்கின்றோம்´என கூறினார். 



இதன்போது இந்த பயிற்சிபட்டறை தொடர்பாக துணுக்காய் வலய கல்வி பணிப்பாளர் மாலினி வெனிடன் கருத்து தெரிவித்தார். 



நவீன உலகத்திலுள்ள சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்தவும் தமது ஆற்றல்களை இனம் கண்டு கொள்ளவும் பயனுள்ளதாக பயிற்சிகள் இருந்தன. தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு மிக தெளிவாக எடுத்துக் கூறியதுடன் கணினி இன்றைய உலகில் எத்தகைய பங்களிப்பை செய்கின்றதென்பதை மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்தனர். தகவல் தொழில்நுட்ப பாடத்தை மாணவர்கள் கற்பதற்கு முன்;வருவதில்லை எனினும் தற்போது அதனை பயில வேண்;டியதன் அவசியம் உணர்த்தப்பட்டு உள்ளது. இது பாரியதொரு வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும் தலைமைத்துவ பயிற்சிகளையும் வழங்கிய மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கும் தாருன்யட்ட ஹெட்டக் அமைப்புக்கும் நன்றிகள் என கிளிநொச்சி பலை மத்திய கல்லூரி மாணவனான எஸ் பிரவனன் தெரிவித்தார். 



எமக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பூரண அறிவு இல்லாதபோதிலும் இந்த பயிற்சிகளின் பின்னர் அதனை பயில வேண்டியதன் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்துகொண்டோம் என புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான செ.கார்த்திகா குறிப்பிட்டார். 



இதேவேளை மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருந்த மாணவர்களுக்கு பல்வேறு புதுமையான அனுபவங்கள் கிடைக்கப்பெற்றதுடன் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் வாய்ப்பும்;மாணவர்களுக்கு கிடைத்தது. 



அத்துடன் தாருன்யட்ட ஹெட்டக் அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இம்மாணவர்களுக்கு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இராப்போசன விருந்தொன்றையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா இலங்கையின் கல்வித்துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களுக்கு தொடர்ச்சியாக அணுசரனை வழங்கி வருகின்றது. கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலைகளுக்கு இலவசமாக மென்பொருள்;களை விநியோகித்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக