//]]>3

திங்கள், 14 மே, 2012

வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு


வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள், இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக்  கடற்பகுதியில் சுண்டிக்குளத்திற்கு அப்பால் கேவில் பகுதி கடற்பரப்பிற்குள் நுழையும் சிங்கள மீனவர்கள், பெருமளவில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர்.
எனினும் இது குறித்துக் கடற்படை எந்த விதமான நடவடிக்கையினையும் எடுத்திருக்க வில்லை. இந்த நிலையில் தமிழ் பிரதேச மீனவர்களின் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின், மாவட்ட பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி கூறுகையில்,
கடற்றொழில் அமைச்சினால் அட்டை பிடிப்பதற்கென சில கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியை பெறவேண்டும். அதேபோன்று எமது பகுதி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் கூட பயன்படுத்த வேண்டும். மேலும் கரையிலிருந்து 20 கிலோமீற்றர் அப்பாலே தொழில் செய்ய முடியும், இந்த அடிப்படையில்தான் அமைச்சு அனுமதியை வழங்கியிருந்தது.
ஆனால் இதற்கு எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் கடுமையாக எதிர்த்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் அனுமதி வழங்கப்பட்ட கம்பனிகள் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வாறு வெளியேறியவர்களே சில தடைசெய்யப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக