//]]>3

திங்கள், 9 ஏப்ரல், 2012

யாழில் 7 மாணவர்கள் பாடசாலையால் இடை நிறுத்தம்



யாழில் ஆசிரியை ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பாக அவதூறு பரப்பும் செயற்பாட்டை முன்னெடுத்த குற்றச்சாட்டில் யாழ். கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக மாணவர்கள் அதிபரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை தனது கற்றல் செயற்பாட்டைக் கடந்து மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களை இழிவுபடுத்துவதாகவும் அவரை உடனடியாக வெளியேற்றுமாறும் அதிபரிடம் மாணவர்கள் கோரியிருந்தனர். 

ஆனால் மாணவர்களின் கோரிக்கையை அதிபர் நிராகரித்துள்ளார். இதனிடையே, குறித்த ஆசிரியைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அவரின் வீடு உட்பட ஏனைய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரின் தூண்டுதலின் பேரில், குறிப்பிட்ட மாணவர்களே இந்தத் துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாகக் கூறி கடிதம் தரும்படி கேட்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கையில் பலத்த காயத்திற்கு உள்ளான நிலையில் ஒரு மாணவன் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். 

இந்நிலையில் தற்போது அதிபர் மற்றும் கல்லூரியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்கள் 14 பேரும் கையொப்பமிட்டு குறித்த ஏழு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக