//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

மாதகல் மேற்குக் கடலில் மீன் பிடிக்கத்தடை



மாதகல் மேற்குபகுதியில் கடற்றொழில் செய்வதற்குத் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடற்படையினரே இதற்கான அனுமதியை மறுத்துள்ளதாகவும் மாதகல் மேற்கு சாம்பல் துறையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையை அண்டிய கடற் பகுதியிலேயே தொழில் செய்யத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைப் புனிதப் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகவே கடற்றொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பௌத்த விகாரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கடல் தெரியும் தூரம் வரை கடற்றொழில் செய்ய முடியாது என கடற்படை புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வீச்சுவலைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீச்சு வலைத் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் ஒன்றாகிய மாதகல் மேற்குப் பகுதியில் கடற்றொழில் செய்வதற்குக் கடற்பட அனுமதி மறுத்துள்ளமையானது அந்தப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் செயலாகும் என வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம், மாதகல் கிராமிய கடற்றொழில் சங்கத் தலைவர் என்.சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த வைகாசிப் பௌர்ணமி தினத்தன்று தென்னிலங்கையிலிருந்து  சுமார் 15க்கும் மேற்பட்ட பஸ்களில் வந்து இறங்கிய தென்னிலங்கை மக்கள் மாதகல் மேற்கில் அமைக்கப்பட்டு வரும் விகாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் கடற்கரையோரமுள்ள மீனவர்களுக்கான இளைப்பாறும் மண்டபம் உள்ளிட்ட பொது இடங்களில் அவர்கள் தங்கியிருந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக